பதிவு #2, © துரை வரதராஜன், 2022
நற்காலையில்
சங்கொலி செவிமடுத்து
கீழ்வானம் பளிச்சிடுமுன்னே
நண்பர்கள் புடைசூழ
நல்லதண்ணீர் தடாகத்தில்
தாமரை அல்லி பூத்திருக்க தேனீக்கள்
மகரந்தம் நுகரும் முன்னே
ஓடி குதித்தோம்
நனைந்த அரைக்கால் சட்டை
பிழிந்த துண்டு இடைக்கட்டி
சந்தனம் குங்குமம் பொட்டிட்டு
ஜால்ரா சப்தம் சலனத்தை அகற்ற
சங்கீத வித்வான்கள் ஆனோம்!
சிறார்களின் சிற்றொலி
சித்தி விநாயகர் செவிமடுக்க ஆரம்பமாகும்
ஓம் நமப் பார்வதி பதியே
என்று
கைத்தள நிறைகனி
தோடுடைய செவியன்
பித்தாய் பிறை சூடி
மந்திரமாவது நீரு
ஏருமயில் ஏறிவிளயாடு முகம்…
பாடினோம்
பக்தி பரவசமடைந்தோம்
பக்தர்கள் பஜனை நண்பர்கள்
புடை சூழ
எம் கிராமத்து வீதிகளில்
யாமே ராஜாக்கள்
தாத்தா அப்பாயி அம்மாச்சி அப்பா அம்மா பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சின்னம்மா மாமா அத்தை அண்ணன் அக்கா தம்பி தங்கச்சி மாப்பிள்ளை
பார்வைகள்
பாசம் பரவசம் பக்தி கலந்த
சக்தி அலைகள்
எம்முள்ளே எழுச்சி தரும்
குரலின் ஓசையும்
கால்களின் நடையும்
மனத்தின் திண்மமும்
வலிமையும் வேகமும்
பெற்றுஅம்மன் ஆலாயம் சென்றடையும்
ஶ்ரீ சக்தி விநாயகர்
ஶ்ரீ சக்தி சியாமளா தேவி அம்மன்
அருள் பெற்று
ஆராதனை அர்ச்சனைகள்
ஆராத்தி விபூதி குங்குமம் இட்டு
வாழை இலையில்
வெள்ளம் சர்க்கரை பாகிட்ட பொங்கல் பிரசாதம்
சுவையினும் சுவையே!
எங்கள் இரு தெரு வாசிகள்
பக்தியும் பங்களிப்பும்
பண்பின் படிப்பினை
பரவசமும் பாசமும் ஒற்றுமையும்
கடந்த காலங்களின் முக்கனிசுவையே!
Photo by Sandeep Kr Yadav on Unsplash